Saturday, October 10, 2009

Madurai Meenakshi Amman Temple

திருச்சிற்றம்பலம் 


பிறந்த குழந்தை முதலில் அம்மா என்று அழைக்கும் , அதுபோல அடியனும் என் அம்மை அப்பனை  பற்றி முதலில் கூறுவதில் பெருமை கொள்கிறேன்.  அடியேன் பிறந்த ஊரான திரு ஆலவாயில் இருந்து எனது பதிப்பை 
தொடங்குகி்றேன்.


தமிழ்நாட்டில் உள்ள பல சிறந்த கோவில்களில் ஒன்றாகவும், பெரிய திருக்கோவில்களில் முதன்மைச் சிறப்பு உடையதாகவும் பாடல் பெற்ற சிவஸ்தலமாக விளங்குவது  மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் ஆலயமாகும். 

 ஆலவாய் பெயர் காரணம்
 

சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக்கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது. மதுரையை அழிக்க வருணன ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் பொருட்டு சிவபெருமான் தன் சடையிலிருந்து விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு.

ஸ்தல புராணம் 

மதுரையை ஆண்ட குலசேகர பாண்டியணின்  கனவில் தோன்றிய சிவ பெருமான் தான்  கடம்ப வனத்திலே, கடம்ப மரத்தடியில் ஒரு சுயம்பு லிங்கமாக தோன்றியிருபதாக கூறி தனக்கு அங்கு ஒரு கோவில் கட்டும் படியும் ஆணையிட்டார். காலை துயில் எழுந்த குலசேகர பாண்டியன் கடம்பவனக் காட்டில் சுயம்யு லிங்கத்தை கண்டறிந்து, இந்த கோவிலையும், பின் நகரத்தையும் நிர்மாணித்ததாக வரலாறு. இந்த சிவலிங்கம் பிற தலங்களாகிய மேருமலை, வெள்ளிமலை, திருக்கேதாரம், வாரணாசி மற்றும் பல பெருமை பெற்ற தலங்கள் எல்லாவற்றிலும் உள்ள சிவலிங்கங்கள் எல்லாவற்றிற்கும் முன்னே தோன்றியதாகும். எனவே இதற்கு மூலலிங்கம் என்ற பெயரும் உண்டு. இதனை திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டக தேவாரப் பாடலில் குறிப்பிடுகிறார்.

முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி
முதிருஞ் சடைமுடிமேல் முகிழ்வெண் டிங்கள்
வளைத்தானை வல்லசுரர் புரங்கள் மூன்றும்
வரைசிலையா வாசுகிமா நாணாக் கோத்துத்
துளைத்தானைச் சுடுசரத்தாற் றுவள நீறாத்
தூமுத்த வெண்முறுவல் உமையோ டாடித்
திளைத்தானைத் தென்கூடற் றிருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.


  ஒருமுறை விருத்த்ராசுரன், விஸ்வரூபன் என்ற இருவரை தேவேந்திரன் கொன்றான். அவர்கள் பிறப்பால் அந்தணர்கள் ஆனதால் இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. அதிலிருந்து விடுபட தன் குருவை நாடி உபாயம் கேட்டான். குருபகவான் அவனிடம் பூலோகம் சென்று பல்வேறு சிவஸ்தலங்களில் வழிபட்டால் ஓரிடத்தில் உன் தோஷம் நீங்கும் என்று கூறினார். அதன்படி இந்திரன் காசி முதலிய பல ஸ்தலங்களில் வழிபட்டு தெற்கு நோக்கி வந்தான். ஓரிடத்தில் கடம்ப மரத்தின் கீழ் சென்றவுடன் தன்னைப் பற்றியிருந்த தோஷம் விலகக் கண்டான். இந்திரன் மகிழ்ச்சியடைய அவன் முன் கடம்ப மரத்தடியில் சிவபெருமான் திருஆலவாய் சோமசுந்தரர் அவனுக்கு காட்சி கொடுத்தார். இந்திரன் சிவபெருமானுக்கு கோவில் கட்ட நினைத்து தேவலோகத்தில் இருந்து ஒரு விமானம் வரவழைத்தான். இத்தலத்து இறைவனுக்கு இந்திரன் விமானம் அமைத்ததால்  அவன் பெயரிலேயே இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன., விண்ணில் இருந்து வந்ததால் விண்ணிழி விமானம் என்றும் சொல்லப்படுகிறது. ஆலயம் எடுத்த இந்திரனிடம் ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் என்னை இங்கு வந்து வழிபடுக என்று கட்டளையிட்டார். அதன்படி ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் இந்திரன் இங்கு வந்து வழிபடுகிறான் என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது. அதனால் தான் சித்ராபௌர்ணமி மதுரையில் விசேஷமாகக் கருதப்படுகிறது.



இக்கோவிலின் தல விருட்சம் :  கடம்ப மரம்
தீர்த்தம் : பொற்றாமரை குளம், மற்றும் வைகை.

 புதன் ஸ்தலம் :
 

நவக்கிரங்களில் புதனுக்குரிய பரிகார ஸ்தலமாக இக் கோவில்  விளங்குகிறது.
புதன் கிழமை இங்கு வந்து 54 நெய் தீபம் ஏற்றி மீனாக்ஷி சொக்கநாதரை வழிபட்டால் புதன் திசையால் வரும் தோஷம் நீங்கும்.
குறிப்பாக சித்திரை மாதம் வரும்  புதன் கிழமை இங்கு வந்து வழிபட்டால் தோஷம் உடனே நிவர்த்தியாகும்.



வெள்ளியம்பலம் : 


நடராஜ பெருமானின் 5 சபைகளில் ஒன்றாக இத்தலம் விளங்குகின்றது. மீனாட்சி, சுந்தரேஸ்வரரின் திருமணம் நடந்தபோது தேவர்கள், மகரிஷிகள், சித்தர்கள் என பலரும் மதுரைக்கு வந்தனர். இவர்களில் வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகிய மகரிஷிகளும் அடக்கம். திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. வியாக்ரபாதரும், பதஞ்சலியும் மட்டும் சாப்பிடவில்லை. இவ்விருவரும் சிதம்பரத்தில் நடராஜரின் நடனம் கண்டு உண்ணும் வழக்கமுடையவர்கள். அவர்களை மணவீட்டார் சாப்பிட அழைத்தனர்.
தாங்கள் சிவதாண்டவம் கண்டபின்பே சாப்பிடுவோம் என்றனர் இருவரும். அதைக்கேட்ட சிவன், மகரிஷிகளுக்காக இங்கு ஆனந்த தாண்டவம் ஆடிக்காட்டினார். இதைப் பார்த்த பிறகே மகரிஷிகள் சாப்பிட்டனர். பிற்காலத்தில் மதுரையை ராஜசேகர பாண்டிய மன்னன் ஆண்டான். சிவபக்தனான அவன் ஆயகலைகளில், 63 ஐ கற்றுத்தேர்ந்தான். பரதம் மட்டும் பாக்கியிருந்தது. ஒரு சமயம் அவன் மற்றொரு மன்னனுடன் போட்டியிட வேண்டிய சூழ்நிலை வந்தது. எனவே, பரதம் கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படவே, அதைக் கற்றான். முதல் நாள் பயிற்சி எடுத்த மன்னனுக்கு, காலில் கடும் வலி உண்டானது. அப்போதுதான் அவனுக்கு சுள்ளென ஓர் உண்மை உரைத்தது.
ஆஹா! பரதம் கற்க இன்று ஒருநாள் ஆடிய நமக்கே இப்படி வலிக்கிறதே! இங்கே எம்பெருமான் தொடர்ந்து ஒரே காலை மட்டும் ஊன்றியல்லவா ஆடிக்கொண்டிருக்கிறார்? அவருக்கு எவ்வளவு வலி இருக்கும்?” என நினைத்தவன், நடராஜர் சன்னதிக்குச் சென்றான்.
பகவானே! உன் கால் வலிக்குமே! காலை மாற்றி ஆடு!” என வேண்டினான். பக்தனின் வேண்டுதலை ஏற்ற சிவன், அவனுக்காக இடக்காலை ஊன்றி, வலது காலை தூக்கி ஆடினார். இவர் சுந்தரேஸ்வரர் சன்னதி முன்புள்ள மகாமண்டபத்தில் கால் மாற்றி ஆடிய கோலத்தில் காட்சி தருகிறார். வியாக்ரபாதர், பதஞ்சலிக்காக ஆடிய ஆனந்த தாண்டவமும், மன்னனுக்காக கால் மாற்றி ஆடிய தாண்டவமும் நடராஜர் சன்னதி எதிரேயுள்ள சுவரில் சித்திரமாக வரையப்பட்டுள்ளது.

சிவன் பாதம் பார்க்க வேண்டுமா: சிவபெருமானின் இடப்பகுதி, அம்பாளின் அம்சமாகும். எனவே சிவனின் இடக்கால் அம்பிகைக்குரியது ஆகிறது. பொதுவாக கோயில்களில் நடராஜர், இடது காலை தூக்கித்தான் ஆடிய கோலத்தில் இருப்பார். எனவே, அவரது தூக்கிய திருவடியை அம்பாள் பாதமாகவே கருதுவர். ஆனால், இக்கோயிலில் வலதுகாலை தூக்கி ஆடிய கோலத்தில் இருப்பதால், இந்த பாதத்தை சிவனின் பாதமாக கருதுகின்றனர். சிவத்தலங்களில் இங்கு மட்டுமே சிவனின் பாதத்தை தரிசிக்கலாம் என்பது விசேஷம். பஞ்ச சபைகளிலுள்ள நடராஜர்களில் மதுரையிலுள்ள வெள்ளியம்பல நடராஜரே பெரிய மூர்த்தியாவார். சிதம்பரம், திருவாலங்காடு, திருநெல்வேலி தலங்களில் சிறிய மூர்த்தியாக பஞ்சலோக விக்ரகமாகவும், குற்றாலத்தில் ஓவிய வடிவிலும்
இருக்கிறார். இங்கு மட்டும் சிலாவிக்ரகமாக, பெரிய வடிவில் காட்சி தருகிறார். இவர், பத்து கரங்களுடன் ஆயுதம் ஏந்தி காட்சி தருவது விசேஷம். அருகில் சிவகாமி அம்மை இருக்கிறாள்.
சபை முழுக்க வெள்ளியால் உருவாக்கப்பட்டுள்ளது. தனி வாசலும் இருக்கிறது. முன்புறம் வியாக்ரபாதரும், பதஞ்சலி மகரிஷியும் வணங்கியபடி இருக்கின்றனர். உற்சவ நடராஜர் அருகில் இருக்கிறார். இவரது சன்னதி எதிரே நின்று சுந்தரேஸ்வரரையும், நடராஜரையும் ஒரே நேரத்தில் தரிசிக்கலாம்.




 சக்தி பீடம்:

64 சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குவது மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவிலாகும். இத்தலத்தில் மீனாக்ஷி அம்மன் சந்நிதியே முதன்மை பெற்றது. ஆகையால் இத்தலத்தில் முதலில் மீனாட்சியை வணங்கி விட்டே பிறகு சுந்தரேஸ்வரர் சந்நிதி சென்று அவரை வழிபடுவது மரபாக இருந்து வருகிறது.

கோவில் அமைப்பு:


எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடைய இத்திருக்கோவில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உள்ள ஒரு பெரிய கோவிலாகும். இக்கோவிலின் ஆடி வீதியில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் வானளாவி காட்சி தருகின்றன. இவற்றுள் 160 அடி உயரமுள்ள தெற்கு கோபுரம் மற்ற கோபுரங்களை விட உயரமானது. கிழக்கு கோபுரத்தின் உயரம் 153 அடி. வடக்கு கோபுரத்தைத் தவிர மற்ற மூன்று கோபுரங்களிலும் பல அற்புதமான சுதை சிற்பங்களைக் காணலாம்.

மீனாக்ஷி அம்மன் சந்நிதியின் முன்பகுதியாக அஷ்டசக்தி மண்டபம் அமைந்துள்ளது. வாயிலில் விநாயகர், முருகன் உருவங்களுக்கு இடையே மீனாக்ஷி கல்யாணம் சுதை வடிவில் காட்சி அளிக்கிறது. உள்ளே மண்டபத்தில் அமைந்துள்ள தூண்களில் எட்டு சக்தியின் வடிவங்கள் அழகுற அமைந்துள்ளன. 


 மீனாக்ஷி சந்நிதி:
அடுத்து உள்ள மீனாக்ஷி நாயக்கண் மண்டபத்தைத் தாண்டி உள்ளே சென்றால் இத்தலத்தின் இறைவி மீனாக்ஷி அம்மையின் சந்நிதி இருக்கிறது. கருவறையில் அம்மை இரண்டு திருக்கரங்களுடன் ஒரு கையில் கிளியை ஏந்தி அருட்காட்சி தருகிறாள். இங்குள்ள மீனாட்சி அம்மன் விக்கிரகம் மரகதக் கல்லால் ஆனது. அம்மனுக்கு மரகதவல்லி என்றே ஒரு பெயர். மேலும் தடாதகை, கோமளவல்லி, பாண்டியராஜகுமாரி, மாணிக்கவல்லி, சுந்தரவல்லி என்றெல்லாம் அழைக்கப்படுவது இந்த அன்னை மீனாட்சியே. மீன் போன்ற கண்கள் உடையவள் என்பதால் மீனாட்சி. மீன் முட்டையிட்டு தனது பார்வையாலேயே அடை காத்து குஞ்சை பொரிக்க வைத்துவிடுமாம், அதுபோல அன்னை மீனாட்சி தன் அருள் கண்களாலேயே பக்தர்களை காக்கிறாள்


சொக்கன் சந்நிதி:
சுவாமி சந்நிதியில் கருவறையில் இறைவன் சுந்தரேஸ்வரர் சிவலிஙகத் திருமேனியாக அருட்காட்சி தருகிறார். இது கடம்ப மரத்தடியில் தோன்றிய ஒரு சுயம்பு லிங்கமாகும். 




திருச்சிற்றம்பலம் 


2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. How do you tell this as budhan sthalam...any reference.....

    ReplyDelete